பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சுக்கும், சீன மக்கள் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாகத்திற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை 2026 மார்ச் 14 அன்று பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சில் நடைபெற்றது. இலங்கைத் தூதுக்குழுவிற்கு பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால தலைமை தாங்கியதுடன், சீனத் தூதுக்குழுவிற்கு சீன மக்கள் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாகத்தின் பிரதி அமைச்சர் கௌரவ ஜாங் யோங் (Zhang Yong) தலைமை தாங்கினார்.
இந்த அமைச்சின் சார்பில், பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சரும் சட்டத்தரணியுமான கௌரவ சுனில் வடகல, பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் திரு. ரவி செனவிரத்ன, மேலதிக செயலாளர் (அபிவிருத்தி மற்றும் திட்டமிடல்) திரு. சி.டி. களுஆரச்சி, மேலதிக செயலாளர் (நிர்வாகம் மற்றும் பொலிஸ்) திருமதி எம்.எஸ்.பி. சூரியப்பெரும, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் திரு. சமிந்த பத்திராஜ மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பொலிஸ் மா அதிபரும் சட்டத்தரணியுமான திரு. பிரியந்த வீரசூரிய மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு. அசங்க கரவிட்ட ஆகியோர் இக்கலந்துரையாடலில் தீவிரமாகப் பங்கேற்றனர்.
இச்சந்திப்பின் போது, இரு நாடுகளினதும் குடிவரவு குடியகல்வு நிர்வாகம், எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பொதுப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. இலங்கையின் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நவீனமயமாக்குவதற்கு சீன அரசாங்கம் தனது ஆதரவை உறுதியளித்ததுடன், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குடிவரவு குடியகல்வு நடவடிக்கைகளை மிகவும் திறம்பட மேற்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டது. இதற்காக சீனக் குடியரசு அரசாங்கம் நிதி உதவி வழங்கவுள்ளது. எல்லை கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், மனிதக் கடத்தல் மற்றும் இணையவழிக் குற்றங்களைத் தடுப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டியதன் அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் வரலாற்று ரீதியான உறவுகளை நினைவு கூர்ந்த சீனத் தூதுக்குழுவினர், சீனாவின் ஆதரவு எப்போதும் இலங்கைக்கு நீடிக்கும் என உறுதியளித்தனர்.
Copyright © 2026 Minister of Public Security and Parliamentary Affairs – Sri Lanka. All Rights Reserved.